×

அயோத்தி தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது: வெறுப்பு கருத்து சொல்லும் நோய் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது...இந்தியா பதிலடி

புதுடெல்லி: பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நில சர்ச்சை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு  சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமிய அமைப்புகளுக்கு அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும்’ என்று  உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதே நேரம்,  இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மசூதி கட்டிக் கொள்ள வேண்டும். இந்த 2.77 ஏக்கர்  நிலத்துக்கு உரிமை கோரி  இஸ்லாமிய அமைப்பான வக்பு வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.  இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.தீர்ப்பு வெளியானதும் நாடு முழுவதும் இந்து,  இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்றன. இருதரப்பும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு விழா நடைபெறும் நேரத்தில், அயோத்தி குறித்து தீர்ப்பு அளித்துள்ளது வருத்தம்  அளிக்கிறது. இந்த சந்தோஷ நேரத்தில், மிகவும் முக்கியமான பிரச்னையில் தீர்ப்பு அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்; தீர்ப்பை, வேறொரு நாளில் அளித்திருக்கலாம். இந்தியாவில், முஸ்லிம்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த  தீர்ப்பு, அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இதற்கு, நமது நாட்டு வெளியுறவுத் துறை தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெறுப்பு கருத்து சொல்லும் நோய் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், வெறுப்புணர்வை விதைக்க முயற்சிப்பது  கண்டனத்துக்குரியது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.


Tags : Pakistan ,Ayodhya ,India , Ayodhya verdict, regret, hatred, disease, Pakistan, India
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...